குச்சனூர் சனீஸ்வரர் கோயிலில் களைகட்டிய ஆடிப்பெருந்திருவிழா! - சனீஸ்வரர் கோயில்
தேனி: சின்னமனூர் அருகே உள்ள குச்சனூர் சனீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. தமிழகத்தில் தனிப்பெரும் கோயிலில் சனீஸ்வரர் பக்கர்களுக்கு அருள்பாலிக்கும் ஒரே இடமாக குச்சனூர் சுயம்பு சனீஸ்வரர் கோயில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்தத் திருக்கோயிலில் வருடந்தோறும் ஆடி மாத சனிக்கிழமைகளில் ஆடிப் பெருந்திருவிழா நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் கடந்த வாரம் கொடியேற்றத்துடன் பெருந்திருவிழா தொடங்கிய நிலையில் நேற்று(ஜூலை 29) ஆடி இரண்டாவது சனிக்கிழமை தினத்தை முன்னிட்டு கேரளா, கர்நாடகா போன்ற அண்டை மாநிலங்களில் இருந்தும் தமிழகத்திலிருந்தும் ஏராளமான பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் சுரபி நதியில் புனித நீராடி எள் தீபம் ஏற்றி இறை வழிபாடு செய்தனர். அதனைத் தொடர்ந்து உப்புடன் சனீஸ்வரரின் வாகனமாக கருதப்படும் மண் காகத்தினை வைத்து தலையைச் சுற்றி பீடத்தில் வைத்து, தங்களது தோஷங்களை நிவர்த்தி செய்தனர். இதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் மாதம் நான்காம் தேதி வெள்ளிக் கிழமையன்று திருக்கல்யாண சுபநிகழ்ச்சி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.