அவதூறு பேச்சு: சீமானுக்கு ஆதரவாகவும், எதிராகவும் டிஜிபி அலுவலகத்தில் புகார்!
சென்னை:அருந்ததியர்கள் ஆதித் தமிழர்கள் என்பதை நிரூபிக்க தன்னால் முடியும். சீமான் தன்னுடன் விவாதம் நடத்த தயாரா என ஆதித் தமிழர் கட்சியின் தலைவர் ஜக்கையன் சவால் விடுத்துள்ளார். நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு ஆதரவாக தமிழ் தேசிய கூட்டமைப்பும், அவருக்கு எதிராக ஆதித் தமிழர் கட்சியும் இன்று (மார்ச் 17) டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
புகார் அளித்த பின் செய்தியாளர்களைச் சந்தித்த சீமானின் ஆதரவாளர் ஏர்போர்ட் மூர்த்தி, “தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்புச் சட்டம் தவறாக போடப்பட்டு வருகிறது. இதனை வலுசேர்க்கும் விதமாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்புச் சட்டம் பதியப்பட்டுள்ளது. சீமான் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்கை அரசு திரும்ப பெற வேண்டும்.
இட ஒதுக்கீடு வழங்கப்பட்ட அறிக்கையில் அருந்ததியர்கள் ஆந்திராவிலிருந்து வந்தவர்கள் எனவும்; அதனடிப்படையில் தான் அவர்களுக்கு 3 விழுக்காடு இட ஒதுக்கீடும் வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, சீமான் குறித்து பேசியது வரலாற்று உண்மை. அவர் மீது போடப்பட்ட பொய் வழக்கைத் திரும்பப் பெற வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், ''தமிழ்நாட்டில் பிற மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் வாழலாம், ஆனால் தமிழன் மட்டும் தான் தமிழ்நாட்டை ஆள வேண்டும் என சீமான் பேசுவது பலருக்கு எரிச்சலூட்டுகிறது'' என அவர் கூறினார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஆதித் தமிழர் கட்சியின் தலைவர் ஜக்கையன், அருந்ததியர் சமூக மக்களை பற்றி இழிவாகப் பேசிய சீமானை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனப் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
தாழ்த்தப்பட்ட சமூகத்தைப் பற்றி அவதூறாகப் பேசி வரும் சீமான் மீது தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த பின்பும் ஏன் கைது நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்றும்; ஒரு வாரத்திற்குள் கைது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும்; இது குறித்து டிஜிபியிடம் தெரிவித்ததாகவும் அவர் கூறினார்.
அருந்ததியர்கள் ஆதித் தமிழர்கள் என்பதை வரலாற்றுப் பூர்வமாக நிரூபிக்க தான் தயாராக உள்ளேன் என்றும்; தன்னுடன் விவாதம் நடத்த சீமான் தயாராக உள்ளாரா என ஜக்கையன் சவால் விடுத்துள்ளார்.
இதையும் படிங்க:முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் திமுக இல்லை - பிரேமலதா விஜயகாந்த் கண்டனம்!