வீலிங் செய்துகொண்டே பைக்கில் வைத்து பட்டாசு வெடித்த இளைஞர்.. போலீசார் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்! - wheeling
Published : Nov 10, 2023, 10:09 AM IST
சென்னை: சென்னையில் இளைஞர் ஒருவர் இருசக்கர வாகனத்தின் முன் பக்கத்தில் பட்டாசு வைத்து வெடிக்க வைத்தவாரே, இருசக்கர வாகனத்தை வீலிங் செய்து செல்லும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.
இந்த வீடியோ காட்சியை சமூக வலைத்தளத்தில் சென்னை காவல் துறையை டேக் (Tag) செய்து ஒருவர் பதிவிட்டு உள்ளார். அதில், இந்த இளைஞருக்கு காவல்துறை தீபாவளி வாழ்த்து கொடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டு உள்ளார். இது குறித்து, சென்னை போக்குவரத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இருசக்கர வாகனத்தை ஓட்டுவது யார், எந்த பகுதியில் எடுக்கப்பட்ட வீடியோ, எப்போது எடுக்கப்பட்ட வீடியோ என்பது குறித்து வாகனத்தின் பதிவினைக் கொண்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வீடியோ எப்போது எடுக்கப்பட்டு இருந்தாலும், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் இது போன்ற சாகசத்தில் ஈடுபட்டால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.