70 அடி உயர கழுகு மரத்தில் அசால்ட்டாக ஏறிய இளைஞர் - திண்டுக்கல் மாவட்ட செய்திகள்
திண்டுக்கல்: வேடசந்தூர் அருகே கோவிலூரில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ பகவதி அம்மன், காளியம்மன், மாரியம்மன், முத்தாலம்மன், பட்டாளம்மன், முனியப்ப சுவாமி, கருப்பணசாமி ஆகிய தெய்வங்களின் உற்சவ திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று சாமி சாட்டுதல் நிகழ்ச்சியுடன் உற்சவ விழா தொடங்கியது. அதனைத் தொடர்ந்து பக்தர்கள் மாவிளக்கு, அக்னி சட்டி எடுத்து ஊர்வலமாக கோயிலுக்கு சென்று பொங்கல் வைத்து, கிடா வெட்டி நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர். இத்திருவிழாவின் நிறைவு நாளான இன்று கழுகு மரம் என்ற வழுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக கோயில் அருகே 70 அடி உயரத்தில் கழுகு மரம் ஊன்றப்பட்டது. இதில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டு கழுகு மரத்தில் ஏறினர். ஆனால் பெரும்பாலானோர் கழுகு மரத்தின் உச்சியை சென்று அடைய முடியாமல் பாதியிலேயே வழுக்கி கீழே வந்தனர். சுமார் 3 மணி நேரமாக நடைபெற்ற இந்த போட்டியில் கோவிலூரை சேர்ந்த இளைஞர் சிவகுமார் கடுமையாக முயற்சி செய்து 70 அடி உயர கழுகு மரத்தின் உச்சி மீது ஏறி பரிசை தட்டி சென்றார். அவருக்கு ஊர் முக்கியஸ்தர்கள் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தி பரிசு பொருட்களை வழங்கினர்.
Last Updated : Feb 3, 2023, 8:24 PM IST