செல்போன் டவர் மீது ஏறி பெண் ஒருவர் போராட்டம்
கரூர்: தான்தோன்றி மலை பகுதியைச் சேர்ந்த செல்வி (வயது 45). சில்லறை விலையில் முட்டை விற்பனை செய்யும் நடைபாதை வியாபாரியாக உள்ளார். இவர் கடந்த வாரம் திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் பகுதியில் முட்டை வியாபாரம் செய்த போது, அப்பகுதியைச் சேர்ந்த கறிக் கடைக்காரர் முருகேசன் தனது கடை முன்பு, முட்டை விற்கக் கூடாது என தகராறு செய்து, செல்வியைத் தாக்க முற்பட்டு உள்ளார்.
இது குறித்து வேடசந்தூர் காவல் நிலையத்தில் செல்வி புகார் அளித்து உள்ளார். எனினும் காவல்துறையினர், புகார் நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. ஆகவே, முருகேசனை கைது செய்து காவல் துறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி செல்வி தான்தோன்றி மலையில் உள்ள செல்போன் டவர் ஒன்றில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டார்.
சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த கரூர் தீயணைப்பு நிலைய அலுவலர் திருமுருகன் மற்றும் கரூர் நகர துணை காவல் கண்காணிப்பாளர் சரவணன், கரூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கீதாஞ்சலி, தான்தோன்றி மலை காவல் ஆய்வாளர் ஓம் பிரகாஷ் உள்ளிட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். “பெண்களை மிரட்டும் ஆண்கள் மீது கடுமையான நடவடிக்கையினை காவல் துறை எடுக்க வேண்டும், தன்னைப் போன்று எந்தப் பெண்ணும் இனி பாதிக்கப்படக் கூடாது” எனச் செல்வி கூறி உள்ளார்.
நேற்று(மே 17) காலை 10 மணிக்குத் துவங்கிய போராட்டம் மதியம் ஒரு மணி வரை என 3 மணி நேரத்திற்கும் மேல் நீடித்ததால், அந்த கடும் பரபரப்பு ஏற்பட்டது. காவல் துறையினர் நடத்திய பேச்சு வார்த்தையில் ”உடனடியாக சம்பந்தப்பட்ட நபரை வேடசந்தூர் காவல்துறையினர் கைது செய்தனர்” எனக் கூறிய பின்பு தான் அந்தப் பெண் கீழே இறங்கி வர சம்மதித்து உள்ளார்.
இதனை அடுத்து பத்திரமாக அந்தப் பெண்ணை கீழே இறக்குவதற்காக தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் உதவியுடன் கயிறு மூலம் கீழே இறங்கினர். பின்னர் அவரை அவசர ஊர்தி மூலம் கரூர் காந்தி கிராமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க:பழனி புலிப்பாணி ஆசிரமத்தில் ஜப்பான் நாட்டினை சேர்ந்தவர்கள் சிறப்பு யாகம்!