சிறுத்தை தாக்கி உயிரிழந்த சிறுமி தாயார் போராட்டத்தில் ஈடுபடும் போது உணவு ஊட்டிய பெண் காவலர்.. - பெண் காவலர் திலோர்மணி
Published : Jan 8, 2024, 4:15 PM IST
நீலகிரி: நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே ஏலமன்னா, கொளப்பள்ளி போன்ற பகுதிகளில் மனிதர்களைத் தாக்கி வந்த சிறுத்தை சனிக்கிழமை மேங்கோ ரேஞ்ச் பகுதியில் வடமாநில தம்பதியினரான சிவசங்கர் கருவா - மிலாந்தி தேவியின் 3 வயதுக் குழந்தை நான்சியை தாக்கி கொன்றது.
இதனைத் தொடர்ந்து, முதுமலை புலிகள் காப்பக வனத்துறை மருத்துவர் ராஜேஷ் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனத்துறை மருத்துவர் சதாசிவம், ஆனைமலை புலிகள் காப்பக மருத்துவர் விஜயராகவன் மற்றும் கோவை வன கால்நடை மருத்துவர் சுகுமார் ஆகியோர் சிறுத்தையைப் பிடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த நிலையில், சிறுத்தையை விரைந்து பிடிக்கவும், வன விலங்குகளிடம் இருந்து மக்களுக்குப் பாதுகாப்பு வழங்கிடவும் கோரிக்கை விடுத்து அப்பகுதி மக்கள் 10க்கும் மேற்பட்ட இடங்களில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் பலியான குழந்தை நான்சியின் தாய் மிலாந்தி தேவியும் போராட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.
அப்போது, உணவு தண்ணீர் இன்றி அழுகையுடன் காணப்பட்ட வரை கவனித்த பெண் காவலர் திலோர்மணி தட்டில் சாப்பாடு கொண்டு வந்து கண்ணீர் மல்க ஊட்டி விட்டுள்ளார். இதனை அங்கிருந்தவர்கள் தங்களது செல்போனில் வீடியோவாக எடுத்து இணையத்தில் பதிவிட்டுள்ளனர்.
தற்போது, அந்த வீடியோ காட்சி சமூக வளைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. மேலும், மனிதாபிமானத்துடன் செயல்பட்ட பெண் காவலர் திலோர்மணிக்கு, பல்வேறு தரப்புகளில் இருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.