Cotton Gambling: ராணிப்பேட்டையில் கொடிகட்டி பறக்கும் காட்டன் சூதாட்டம் - காவல்துறை கைகட்டி வேடிக்கை பார்க்கிறதா?
ராணிப்பேட்டை:ராணிப்பேட்டை மாவட்டத்தில் காவல் துறையினர் பணம் பெற்றுக்கொண்டு அப்பகுதியில் ஏழைகளின் கழுத்தை நெரிக்கும் காட்டன் சூதாட்டத்தை தடுக்காமல், அவற்றை கண்டுகொள்ளாமல் உள்ளதாக குற்றம்சாட்டு எழுந்துள்ளது. இந்த காட்டன் சூதாட்டத்தில், சிக்கிய கூலித் தொழிலாளர்களின் கணவன்களால் அவர்களது மனைவிகள் கண்ணீர் வடிக்கும் நிலைக்கு ஆளாகியுள்ளனர். இதற்கிடையே, அப்பகுதியில் காவல் துறையினர் லட்சக்கணக்கில் சூதாட்டத்தை தடுக்காமல் இருப்பதற்கு பணம் பெற்றதாகவும் கூறப்படுகிறது.
தமிழ்நாடு முழுவதும் காட்டன் சூதாட்டம் தடை செய்யப்பட்ட நிலையில், கூலித் தொழிலாளர்களின் பணத்தை ராணிப்பேட்டை சிப்காட் காவல்நிலையம் எதிரே ஹவுசிங் போர்டு பகுதியில், 3 நம்பர் காட்டன் சூதாட்டம் ஜோராக நடந்து வருகிறது. இந்நிலையில், அப்பகுதியில் இந்த 3ஆம் நம்பர் காட்டன் சூதாட்டம் நடத்திய வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
வேலூர் மாவட்டத்தை தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் இந்த காட்டன் சூதாட்டமானது, தற்போது ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொடிகட்டி பறப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த சட்டத்திற்குப் புறம்பான பல குடும்பங்களை சீரழிவிற்கு உள்ளாக்கும் இந்த காட்டன் சூதாட்டம் விவகாரத்தில், காவல்துறை இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும்; இதற்குக் காரணம், காவல் துறையில் உள்ள உயர் அதிகாரிகளுக்கு மாதம் தவறாமல் லட்சக்கணக்கில் பணம் செல்வதாகவும் கூறப்படுகிறது.
இவை ஒருபுறம் இருக்க, அவ்வப்போது இந்த சூதாட்ட கும்பலிடம் இருந்து ராணிப்பேட்டை மற்றும் வேலூர் மாவட்ட நகர குற்றப்பிரிவில் உள்ளவர்கள் கேரளா லாட்டரிச் சீட்டுகளை மட்டும் வசூல் வேட்டை செய்து அவர்களின் உயர் அதிகாரிகளிடம் கொடுத்து நல்ல பெயர் எடுப்பதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே, இந்த காட்டன் சூதாட்டம் நடத்தும் சமூக விரோதிகளை கண்டும் காணாமல் இருப்பதால் பல குடும்பங்கள் நடுரோட்டிற்கு வந்துள்ளன என்று பெண் சமூக ஆர்வலர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
தற்போது வெளியான இந்த காட்டன் சூதாட்டம் ஆடிய வீடியோவைத் தொடர்ந்து, இனியாவது மாவட்ட நிர்வாகம் காவல்துறை நிர்வாகம் இதுபோன்ற சமூக விரோதிகளை தயவு தாட்சண்யமின்றி ஒடுக்கும் நேர்மையான காவல் அதிகாரிகளை நியமனம் செய்து இவற்றை இரும்புக்கரம் கொண்டு தடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. இதன்மூலம், ராணிப்பேட்டை மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களை சட்டம் ஒழுங்கில் முன் உதாரணமாக திகழும் மாவட்டங்களாக மாற்ற வேண்டும் என்பது அனைவரின் கோரிக்கையாக உள்ளது.