சினிமா பாடலுக்கு குத்தாட்டம் போட்ட கோவை மாநகராட்சி பெண் கவுன்சிலர் - வைரலாகும் வீடியோ! - meena logu
கோவை வ.உ.சி மைதானத்தில் 'எங்கள் முதல்வர் எங்கள் பெருமை' என்ற தலைப்பின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்க்கை பயணம் குறித்த புகைப்பட கண்காட்சி கடந்த 7ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கண்காட்சியில் மாலை நேரங்களில் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகின்றன.
இதனைக் காண நாள்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வருகை புரிகின்றனர். புகைப்பட கண்காட்சியை காண பல்வேறு திரைப்பிரபலங்களும் வருகின்றனர். கடந்த ஒன்பதாம் தேதி கிராமிய பாடகர்களான செந்தில் - விஜயலட்சுமி தம்பதியினர் கண்காட்சியை பார்வையிட்டு கலை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நடிகர் பிரபுதேவா நடித்த திரைப்படத்தில் இடம்பெற்ற சின்ன மச்சான் பாடலை மேடையில் பாடினர்.
அப்போது கலை நிகழ்ச்சியை காண வந்த மாநகராட்சி மத்திய மண்டல தலைவரும், 46-வது வார்டு உறுப்பினருமான மீனா லோகு, சின்ன மச்சான் பாடலுக்கு நடனமாடினார். அதனை சக பெண் கவுன்சிலர்கள் மற்றும் பொதுமக்கள் கண்டு ரசித்தனர். திமுக கவுன்சிலர் லோகு மீனாவின் நடனம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: 'வந்தே பாரத்' ரயில் கொங்கு மண்டல வளர்ச்சிக்கு உதவும் - வானதி சீனிவாசன் மகிழ்ச்சி