"நாங்க எல்லாம் அப்பவே அப்படி" சிறுவனை கூண்டினுள் வைத்து பயணிக்கும் வீடியோ! - A Viral video of a 5 year old boy
கோவை: 5 வயது சிறுவன் ஒருவனை கூண்டிற்குள் அமர வைத்தபடியும் முன்பக்கத்தில் மற்றொருவரை அமர வைத்தபடியும் ஒருவர், மோட்டார் இருசக்கர வாகனத்தை ஓட்டிச்சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கோவை ஈச்சனாரி பகுதியில் பொள்ளாச்சியிலிருந்து கோவை செல்லும் சாலையில் இருசக்கர வாகனத்தின் பின்னால் கட்டப்பட்ட சிறிய ரக கூண்டிற்குள் குழந்தையை அமர வைத்தபடி இருவர் சென்றது சாலையில் செல்வோரின் கவனத்தை ஈர்த்தது. டிவிஎஸ் XL வாகனத்தை இளைஞர் ஒருவர், ஓட்டிச் செல்ல வாகனத்தின் முன்புறம் மற்றொரு இளைஞர் அமர்ந்துள்ளார்.
வாகனத்தில் பின்புறம் சரக்கு பொருள்களை வைக்கும் இடத்தில் சிறியரக கூண்டு ஒன்று கட்டப்பட்டுள்ளது. அதில் சுமார் ஐந்து வயது மதிக்கத்தக்க சிறுவன் அமர்ந்தபடி பயணிப்பதை அவ்வழியாக காரில் சென்ற ஒருவர் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இந்த காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது. இதற்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவுகளையும் எதிர்ப்புகளையும் தெரிவித்துள்ளனர்.
இத்தகைய ஆபத்தான பயணங்களை மேற்கொள்வதன் மூலம் சாலை விபத்துகளில் நாம் சிக்க நேரிடும் என்பதையும், அதைத்தொடர்ந்து ஏற்படும் பாதிப்புகள் நமக்கும் பிறருக்கும் பல வழிகளில் சிக்கல்களை ஏற்படுத்தும் என்பதையும் மறவாதீர்கள்.