பேருந்து நிலையத்தில் இளம்பெண்ணுக்கு தாலி.. வைரலாகும் வீடியோ! - tirupathur district news
திருப்பத்தூர்:ஆம்பூர் அண்ணா பேருந்து நிலையத்தில் நேற்று (மார்ச்.14) இரவு வந்த காதல் ஜோடி ஒன்று அங்கும் இங்கும் சுற்றித்திரிந்தது. ஒருவழியாக பேருந்து நிலையத்தின் கழிவறையின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனியார் பேருந்தின் பின்புறம் சென்ற அந்த ஜோடி யாரேனும் வருகிறார்களான என்று பதற்றமான நிலையில் பார்த்தனர்.
பின்னர் இளைஞர் தனது பாக்கெட்டில் இருந்த தாலி கயிற்றை எடுத்து அந்த இளம்பெண்ணின் கழுத்தில் கட்டினார். பின்னர் இருவரும் சாவகாசமாக அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர். அதனை அங்கிருந்த நபர் ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்த நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் இளம்பெண்ணுக்கு தாலி கட்டிய அந்த நபர் யார்? இருவரும் கல்லூரி மாணவர்களா? எந்த பகுதியை சேர்ந்தவர்கள் என்ற கோணத்தில் ஆம்பூர் நகர காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்தாண்டு கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே பேருந்து நிறுத்தத்தில் பள்ளி சீருடையில் இருந்த மாணவிக்கு நபர் ஒருவர் தாலி கட்டிய வீடியோ வெளியாகி பெரும் பிரச்சனையை ஏற்படுத்திய நிலையில், தற்போது ஆம்பூரிலும் அதேபோன்ற சம்பவம் அரங்கேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.