மருத்துவராக மாறிய நோயாளிகள்.. அரக்கோணம் அரசு மருத்துவமனை அவலம்! - doctors in hospital not on duty
ராணிப்பேட்டை:அரக்கோணத்தை அடுத்த மின்னல் பகுதியில் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. அந்த மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் முறையாக பணிக்கு வருவதில்லை என அப்பகுதி மக்கள் ஏற்கனவே குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.
அந்தப் பகுதியில் வசிக்கும் மக்கள் அவசர சிகிச்சைக்கு மருத்துவர்கள் இல்லாமல் சிரமப்படுவதாகவும் புகார்கள் எழுந்துள்ளது. இதற்கிடையே நேற்று முன்தினம் (மே 27) மாலை 6.35 மணியளவில் அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் தன்னுடைய மகளுக்கு மூச்சுத் திணறல் ஏற்படவே, அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
ஆனால், அப்பொழுது அவசர தேவைக்கு அங்கு மருத்துவர்கள் இல்லாததைக் கண்டு அவர் அதிர்ச்சி அடைந்துள்ளார். அதனைத் தொடர்ந்து, அந்த மருத்துவமனையில் பணியாற்றி வந்த தூய்மை பணியாளரிடம் மருத்துவர்கள் எப்பொழுது வருவார்கள் என்பது குறித்தும் விசாரித்துள்ளார்.
அதற்கு அந்த தூய்மை பணியாளர், தற்பொழுது மருத்துவர்கள் இங்கு இல்லை என்றும் 7 மணிக்கு மேல் தான் மருத்துவர்கள் வருவார் என்றும் பலமுறை கூறியும் இப்படித்தான் நடக்கிறது என்று அலட்சியமாக பதில் அளித்துள்ளார். இதனை அந்த நபர் வீடியோவாக தனது கைப்பேசியில் பதிவு செய்து அதை வீடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்.
தற்பொழுது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதனைத் தொடர்ந்து, இந்த அவல நிலையை உடனடியாக அரசு சரி செய்ய வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க:மீன் பிரியர்கள் அதிர்ச்சி; குழி தோண்டி புதைக்கப்பட்ட மீன்கள்..சோதனையில் தெரியவந்த உண்மை!