ஓரிரு நாளிலேயே பெயர்ந்து வரும் புதிய தார்சாலை.. செங்கம் மக்களின் வேதனை வீடியோ! - collector murugesh
திருவண்ணாமலை:செங்கம் அடுத்த புதுப்பாளையம் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஒடஞ்சமடை பகுதியில் கடந்த 20 ஆண்டுகளாக சாலை வசதி இல்லாமல் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். மேலும், தார் சாலை அமைத்து தரக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் பல முறை மனு கொடுத்தும் கோரிக்கை வைத்தும் வந்துள்ளனர்.
இந்நிலையில் அப்பகுதி மக்கள் கோரிக்கையின் அடிப்படையில், புதிய தார் சாலை அமைக்கும் பணி தனியார் ஒப்பந்ததாரர் கருணாநிதி என்பவரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனையடுத்து அப்பகுதியில் புதியதாக தார் சாலை அமைக்கப்பட்டது. மேலும், தார் சாலை அமைத்து ஓரிரு நாட்களே ஆன நிலையில் தற்போது அதை கையால் பெயர்த்து எடுக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதனை வீடியோ எடுத்து அப்பகுதி மக்கள் இணையத்தில் பதிவேற்றியுள்ளனர்
இது தொடர்பாக ஒப்பந்ததாரர் கருணாநிதியை அப்பகுதி மக்கள் தொடர்பு கொண்டபோது அவர் எவ்வித பதிலும் அளிக்காமல் அலட்சியம் காட்டுவதாக கூறப்படுகிறது இதனால் மாவட்ட ஆட்சியர் உடனடியாக சம்பந்தப்பட்ட சாலையை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.