சிறுவன் தலையில் சிக்கிய பாத்திரம்.. கூலாக வீடியோ பார்த்த சிறுவன்.. சாதுர்யமாக அகற்றிய மீட்புப்படை வீரர்கள்! - சில்வர் பாத்திரம்
திருநெல்வேலி:கங்கைகொண்டான் அடுத்த அணைத்தலையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மிக்கேல் ராஜ். இவரது மகன் சேவியர் (4). சிறுவன் வழக்கமாக இரவு வீட்டில் உள்ள பொருட்களை வைத்து விளையாடிக்கொண்டிருந்த போது வீட்டில் இருந்த ஒரு பாத்திரத்தை எடுத்து தலையில் மாட்டியுள்ளார்.
அந்த பாத்திரம் தலையில் வசமாக சிக்கிய நிலையில் அதனை எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சிறுவன் அழுத நிலையில் பெற்றோர் பாத்திரத்தை எடுக்க கடுமையாக முயற்சித்துள்ளனர். ஆனால் அந்த பாத்திரத்தை எடுக்க பலரும் போராடி அதில் தோல்வியடைந்த நிலையில் 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் சிறுவன் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
அங்குள்ள மருத்துவர்கள் தகவல் அளித்ததன் அடிப்படையில் மருத்துவமனைக்கு சென்ற பாளையங்கோட்டை தீயணைப்பு நிலைய வீரர்கள் அவர்களிடம் இருந்த பிரத்யேக கருவிகளைக் கொண்டு பாத்திரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர். இதைத்தொடர்ந்து சிறுவனுக்கு கூடுதல் சிகிச்சைகள் அளிக்கப்பட்டது. பாத்திரத்தை மீட்புப்படை வீரர்கள் அகற்றியபோது பதற்றமடையாமல் இருக்க சிறுனுக்கு செல்போனில் வீடியோ காண்பிக்கப்பட்டது.