Independence Day 2023: சுதந்திர தின விழாவைக் கொண்டாடிய கோயில் யானை..! - மங்களாம்பிகை சமேத ஆதிகும்பேஸ்வரர் சுவாமி கோயில்
தஞ்சாவூர்: இன்று நாடெங்கும் 77வது சுதந்திர தினம் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, மகாமக தொடர்புடைய 12 சிவாலயங்களில் முதன்மையான தலமாக விளங்கும் கும்பகோணம் மங்களாம்பிகை சமேத ஆதிகும்பேஸ்வரர் சுவாமி திருக்கோயிலில் உள்ள யானை மங்களம், இந்திய நாட்டின் சுதந்திர தினத்தைச் சிறப்பாகக் கொண்டாடும் விதமாக, வழக்கமாக நெற்றியில் அணியும் பெரிய விபூதி பட்டைக்குப் பதிலாகத் தேசியக் கொடி வரைந்தும் இரு காது மடல்களில் தேசியக் கொடி வரைந்தும் கால்களில் கொலுசுகள் அணிந்தும் கழுத்தில் மங்களம் என பெயர் தாங்கிய டாலர் அணிந்தும் சிறப்பு அலங்காரத்துடன் காணப்பட்டது.
வழக்கமாகப் பிரகாரம் சுற்றி வந்து சுவாமி அம்பாளை வழிபடும் மங்களம் இன்று சுதந்திர தினம் என்பதால், துதிக்கையில் தேசியக் கொடியை ஏந்தியபடி, பிரகார வலமாக வந்து இறைவன், இறைவியை வழிபட்டு மகிழ்ந்தது. இதனைக் கண்ட பொது மக்கள் பலரும் ஆச்சரியத்துடன் ரசித்ததுடன் தங்கள் ஆசை தீர இக்காட்சிகளை தங்களது அலைபேசிகளில் வீடியோ பதிவு செய்தும் ஆனந்தப்பட்டனர்.