தமிழக - ஆந்திர எல்லை மலைப்பகுதியில் திடீர் காட்டுத் தீ! - Sudden forest fire
திருப்பத்தூர்: வாணியம்பாடி அடுத்த தமிழக - ஆந்திர எல்லைப்பகுதியான தும்பேரி அண்ணாநகர் பகுதியில் உள்ள வெள்ளமலை, தரைகாடு, கக்கல கோணைமேடு, மதனாஞ்சேரி ஆகிய மலைத் தொடர்களில் பல்வேறு வனவிலங்குளும், பல வித மூலிகை செடிகளும் உள்ளன. தற்போது இந்த மலைப்பகுதிகளில் உள்ள செடிகளில் நேற்று இரவு திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியுள்ளது.
காட்டில் பற்றிய அந்தத் தீ மளமளவென பரவி சிறிது நேரத்திலேயே மலைத்தொடர்கள் முழுவதும் பரவி கொளுந்து விட்டு எரிய தொடங்கியது. இதில் மலைத் தொடர்களில் இருந்த பல அரிய வகை செடிகளான கருங்காலி, துறிஞ்சி போன்ற மூலிகை செடிகள் தீயில் கருகி வீணகின. அதுமட்டுமின்றி மயில், முயல் போன்ற பல்வேறு வன பறவைகளும் தீயில் எரிந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
மேலும் இந்த சம்பவம் குறித்து அறிந்து அந்த இடத்திற்கு வந்த வனத்துறையினர் மலைத் தொடர்களில் பற்றி எரியும் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அங்கு உள்ள செடிகளுக்கு மர்ம நபர்கள் யாரேனும் தீ வைத்தார்களா? அல்லது தீ பற்ற வேறேதும் காரணமா? எனவும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.