சென்னையில் அடுக்கு மாடி கட்டடத்தின் மேல் தளத்தில் திடீர் தீ விபத்து! - ராயப்பேட்டை போலீசார்
சென்னை: ராயப்பேட்டையில் உள்ள ரியல் டவர்ஸ் என்ற அடுக்குமாடி கட்டடத்தில் வணிக வளாகம், ஐடி கம்பெனி, மேலும் நான்காவது மாடியில் தனியார் தொலைக்காட்சி உள்ளிட்டவை இயங்கி வருகிறது. இந்நிலையில் கட்டடத்தில் மொட்டை மாடி பகுதியில் ஜெனரேட்டர் பொருத்தப்பட்டுள்ளது. இன்று திடீரென ஜெனரேட்டரிலிருந்து புகை வெளியேறியதால் அங்கு தீ பிடித்து மளமளவென எரிந்துள்ளது.
இதையடுத்து உடனடியாக கட்டடத்தில் இருந்த ஊழியர்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியே அப்புறப்படுத்தப்பட்டனர். இது குறித்து தீயணைப்புத்துறையினருக்கு உடனடியாக தகவல் அளித்ததன் மூலம் தேனாம்பேட்டை, கீழ்ப்பாக்கம், எழும்பூர் உள்ளிட்டப் பகுதியிலிருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
கட்டடத்தின் உயரம் அதிகம் உள்ளதால் தீயைக் கட்டுப்படுத்த சிரமம் ஏற்பட்டது. ஸ்கை லிஃப்ட் வாகனம் மூலம் தீயை அணைக்க தீயணைப்புத் துறையினர் முயற்சித்தனர். டவர் இருக்கும் சாலை குறுகிய சாலை என்பதால் தீயணைப்பு வாகனங்கள் கொண்டு செல்ல தாமதம் ஏற்பட்டது.
இதையடுத்து சுமார் 2 மணி நேரம் போராடி தீயணைப்புத் துறையினர் அடுக்கு மாடி கட்டடத்தின் மேல் பரவிய தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும் மின் கசிவு காரணமாகவே தீ விபத்து ஏற்பட்டு இருக்கிறது என போலீசார் தெரிவித்தனர். மேலும் இது குறித்து ராயப்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு!