தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு தஞ்சை பெரிய கோயில் பெருவுடையாருக்கு சிறப்பு அபிஷேகம்
தஞ்சாவூர்: தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு தஞ்சை பெரிய கோயிலில் உள்ள பெருவுடையார் சிலைக்கு சந்தனம், பால் உள்ளிட்ட அபிஷேகப் பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
சுபகிருது ஆண்டாக சித்திரை முதல்நாள் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு உலக பாரம்பரிய சின்னமாக திகழ்ந்து வரும் தஞ்சை பெரிய கோயிலில் எழுந்தருளி இருக்கும் பெருவுடையாருக்கு திரவியப்பொடி, விபூதி, இளநீர், பஞ்சாமிர்தம், தேன், சந்தனம், பால், தயிர் உள்ளிட்டப் பல்வேறு வகையான அபிஷேகப் பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
இதில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று பெருவுடையாரை தரிசனம் செய்தனர். மேலும் இக்கோயில் வளாகத்தினுள் அமைந்துள்ள வராஹி அம்மனின் சிலைக்கும் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு, அலங்கார தீபம் காட்டப்பட்டது. மேலும் இந்த ஆண்டு பருவமழை பொழிந்து விவசாயம் செழிக்க வேண்டும் என பக்தர்கள் மனம் உருகி பெருவுடையாரையும், வராஹி அம்மனையும் வேண்டினர்.
இதையும் படிங்க:தமிழ்ப் புத்தாண்டு - 6 கோடி ரூபாய் நோட்டுக்களால் அம்மனுக்கு அலங்காரம்!