பைக் சீட்டிற்குள் புகுந்த பாம்பு! கோவை ஆட்சியர் அலுவலகத்தில் பதற்றம்! - snake
Published : Nov 24, 2023, 9:21 PM IST
கோயம்புத்தூர்: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பொதுமக்கள் தாங்கள் கொண்டு வரும் இருசக்கர வாகனத்தை அலுவலகத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் நுழைவாயிலின் பின்புறம் நிறுத்தி விட்டு அலுவலகத்திற்குள் செல்வது வழக்கம்.
அவ்வாறு, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் நிறுத்தி வைக்கப்பட்ட ஒருவரது பைக்கிற்குள் சுமார் ஒன்றரை அடி நீளமுள்ள நாகம் புகுந்தது. இதனைப் பார்த்த அருகில் இருந்த பொதுமக்கள் வாகனத்தின் உரிமையாளர் யார் எனத் தெரியாததால் தீயணைப்புத் துறையினருக்கு உடனடியாக தகவல் தெரிவித்தனர்.
பொதுமக்கள் அளித்த தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் அந்த வாகனத்தின் பாகங்களைப் பிரித்து பார்த்ததில் நாகமானது சீட்டிற்கு அடியில் பதுங்கி இருந்தது தெரிய வந்தது. இதனை அடுத்து தீயணைப்புத் துறையினர் லாவகமாக அந்த நாகத்தை பிடித்து சென்றனர்.
தற்போது, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் அடிக்கடி விஷ ஜந்துக்கள் தென்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. ஆதலால் உடனடியாக மாவட்ட நிர்வாகம் இதற்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.