காரில் நுழைந்த கொம்பேறி மூக்கன் பாம்பு: லாவகமாக மீட்டு வனத்துறையிடம் ஒப்படைப்பு - viral video
கோயம்புத்தூர்: பாப்பநாயக்கன் பாளையம் பகுதியை சேர்ந்த ஒருவர் தனது காரை சாலையில் ஓட்டிச் சென்றுள்ளார். அப்பொழுது, மழை நீர் வடிக்கும் வைப்பர் கருவியின் மீது பாம்பு ஒன்று எட்டிப் பார்த்து உள்ளது. அதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவர் உடனே காரை சிங்காநல்லூரில் உள்ள ஷோரூம் ஒன்றுக்கு ஓட்டிச் சென்று உள்ளார். அதன் பின் ஷோரூமில் இருந்து பாம்பு பிடி வீரருக்கு தகவல் தரப்பட்டுள்ளது.
பின்னர் வன உயிர் மற்றும் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை அமைப்பைச் சார்ந்த பாம்பு பிடி வீரரும், வழக்கறிஞருமான சித்ரன் விரைந்து சென்று காரில் பைபர் பகுதியில் பதுங்கி இருந்த பாம்பை பத்திரமாக பிடித்தார். பின் பிடிக்கப்பட்ட கொம்பேறி மூக்கன் பாம்பை பாட்டிலில் அடைத்து வனத்துறையிடம் பாதுகாப்பாக ஒப்படைத்தார். வனத்துறையினர் அதனை வனப்பகுதியில் விடுவித்தனர். ஷோரூமில் பாம்பை மீட்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியேறி உள்ளது.
குறிப்பாக காரில் பாம்பு புகுந்து விட்டால் உடனடியாக தண்ணீர் பீச்சி அடிப்பதோ அல்லது மண்ணெண்ணெய் ஊற்றி வெளியே வர முயற்சி செய்வதோ கூடாது எனவும், பாம்பு பிடி வீரர்களுக்கு தகவல் தெரிவித்தால் உடனடியாக அவர்கள் விரைந்து சென்று பாம்பை பாதுகாப்பாக மீட்பார்கள் என்றும் காருக்குள் புகுந்த பாம்பை விரட்டும் நோக்கில் பொதுமக்கள் தன்னிச்சையாக செயல்படக் கூடாது என வன உயிரியல் ஆர்வலர்கள் விழிப்புணர்வு தகவல் தெரிவித்து உள்ளனர்.