ஷேவிங்கா, கட்டிங்கா; கடைக்குள் புகுந்த பாம்பால் அதிர்ச்சி அடைந்த சலூன் கடைக்காரர்!
நெல்லை: பாளையங்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு எதிரே முகமது ரபீக் என்பவர் சலூன் கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் இவரது கடைக்குள் திடீரென பாம்பு ஒன்று புகுந்தது. இதைக் கண்ட கடை உரிமையாளர் முகமது ரபீக் பதற்றத்துடன், அதை விரட்டியபோது அருகில் உள்ள இருசக்கர வாகனத்துக்குள் அந்த பாம்பு ஏறியது.
பின்னர் பாம்பு எங்கு சென்றது எனத் தெரியாத நிலையில் அப்பகுதி மக்கள் பாளையங்கோட்டை தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினருக்குத் தகவல் தெரிவித்ததன்பேரில், பாளையங்கோட்டை தீயணைப்பு மற்றும் மீட்பு வீரர்கள் அங்கு சென்று இருசக்கர வாகனத்தின் சீட்டை அகற்றிவிட்டு, பாம்பை வெளியே வரவழைக்க கரப்பான் பூச்சி மருந்தான ஹிட் (Hit) அடித்தனர்.
அப்போது அந்த பாம்பு பெட்ரோல் டேங்க் மேலே ஏறியது. உடனே அந்தப் பாம்பை தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை வீரர்கள் பிடித்தனர். மேலும் அது கொம்பேரி மூக்கன் வகையைச்சேர்ந்த பாம்பு என்பது தெரியவந்தது. இதையடுத்து அந்தப் பாம்பை, வனப்பகுதியில் கொண்டுவிட தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
நெல்லை மாநகரில் பெய்த பலத்த மழையால் பதுங்கி இருந்த பாம்பு வெளியே வந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இதையும் படிங்க: சாதி பெயரைச் சொல்லி திட்டியதாக நெல்லை மேயர் மீது புகார்.. தொடரும் திமுக உட்கட்சி பூசல்