உடல் முழுவதும் சேற்றை பூசி குளித்த காட்டு யானை: ஆனந்தமாக கண்டு ரசித்த அரசு குடியிருப்புவாசிகள் - elephant playing in mud
நீலகிரி:நீலகிரி மாவட்டம், கேரள எல்லையில் அமைந்துள்ளது கெத்தை, பரளிக்காடு. இங்கு தமிழக அரசின் மின்சார வாரிய குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ள வனப்பகுதியில் இருந்து ஒற்றை யானை ஒன்று குடியிருப்புப் பகுதிக்கு அருகில் வந்துள்ளது.
கொசுக்கள், விஷப் பூச்சிகள் மற்றும் வெப்பத்தில் இருந்து தன்னை காத்துக் கொள்ள இப்பகுதிக்கு வந்த அந்த ஒற்றை காட்டு யானை, அரசு குடியிருப்பிற்கு அருகில் இருந்த சிறிய குழியில் தேங்கி கிடந்த சேற்றை எடுத்து உடல் முழுவதும் பூசும் காட்சியை அங்கிருந்தவர்கள் தங்களது செல்போன்களில் படம் பிடித்தனர்.
யானைகள் வெப்பத்திலிருந்து பாதுகாப்பது மட்டுமல்லாமல், பூச்சி கடியிலிருந்தும், கொசுக் கடியில் இருந்தும் தங்களை பாதுகாத்துக் கொள்ள, குளித்த பிறகு, தங்கள் தோலில் பாதுகாப்பு அடுக்கை உருவாக்குவதற்காக பெரும்பாலும் சேற்று குளியலில் ஈடுபடுகின்றன. மேலும் இது வெயிலின் தாக்கத்தைத் தடுக்கிறது.
இவ்வாறு இவை மேற்கொண்ட மண் குளியலை கெத்தை மின்வாரிய குடியிருப்பில் இருந்தவர்கள் மகிழ்ச்சியுடன் படம் எடுத்தனர். சிறிது நேரம் சேற்றுக்குளியல் எடுத்துக் கொண்ட யானை பின்னர் அருகில் இருந்த வனப்பகுதிக்கு சென்றது.