Video - ஆம்பூர் மலைப்பகுதியில் நடமாடும் ஒற்றைக்கொம்பன் காட்டு யானை - A single tusk wild elephant
திருப்பத்தூர்:ஆம்பூர் அடுத்த ஜவ்வாது மலைத்தொடரில் அமைந்து உள்ளது நாயக்கனேரி என்னும் மலைக்கிராமம். இந்த மலைக்கிராமத்திற்கு உட்பட்ட பனங்காட்டேரி மலை செல்லும் சாலையில் ஒற்றைக் காட்டு யானை நடமாட்டத்தைக் கண்ட அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள், சாலையில் நின்று கொண்டிருந்த காட்டு யானையின் அருகில் சென்று தங்களது செல்போனில் படம்பிடித்தனர்.
மேலும் ஒற்றைக் கொம்பன் என்று மலைக்கிராம மக்களால் அழைக்கப்படும் இந்தக் காட்டுயானையானது பல ஆண்டுகளாக ஜவ்வாது மலைத்தொடர்களில் சுற்றித் திரிகிறது எனக் கூறப்படுகிறது. இந்த ஒற்றைக் கொம்பன் காட்டு யானையானது சில மாதங்களுக்கு முன், ஆலங்காயம் வனச்சரகத்திற்கு உட்பட்ட காவலூர் வனப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களை சேதப்படுத்தி, சுற்றித்திரிந்த நிலையில், தற்போது ஆம்பூர் வனச்சரகத்திற்குட்பட்ட பனங்காட்டேரி மலைப்பகுதிக்கு வந்துள்ளது.
வயது முதிர்ந்த இந்த ஒற்றைக் கொம்பன் யானையால் இதுவரையில் எவ்வித உயிர்சேதமும் ஏற்படவில்லை என வனத்துறையினர் தெரிவித்தனர். மேலும் இந்த ஒற்றைக்கொம்பன் காட்டுயானையை மீண்டும் கிராமப் பகுதிக்கு வராத வண்ணம் தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வனத்துறையினருக்கு மலைக் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.