பிரசித்திபெற்ற அவினாசி லிங்கேஸ்வரர் கோயிலில் திருட முயற்சி... குற்றவாளி கைது! - திருப்பூர் செய்திகள்
திருப்பூர் மாவட்டம்:அவினாசியில் பிரசித்திபெற்று விளங்கும் அவினாசி லிங்கேஸ்வரர் கோவிலில் கொள்ளை முயற்சி நடைபெற்று உள்ளது. வழக்கம்போல் அதிகாலை நேரத்தில் கோயில் அர்ச்சகர்கள் நடை திறந்தபொழுது கோயிலின் உள்ளே பொருட்கள் சிதறிக் கிடந்தும், கோயிலுக்குள் உள்ள இரண்டு உண்டியல்களை உடைக்க முயற்சி நடந்து உள்ளதும், மேலும் தெற்கு உள் பிரகார வளாகத்தில் 63 நாயன்மார்கள் உள்ள கோபுரங்களின் கலசம் உடைக்கப்பட்டுள்ளதையும் அர்ச்சகர்கள் தெரிந்து கொண்டனர்.
இந்த சிலைகள் மீது அணிவித்து உள்ள துணிகள் மற்றும் அவிநாசி லிங்கேசுவரர் மீது இருந்த பொருட்கள் மற்றும் துணிகள் களைந்து உள்ளதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அர்ச்சகர்கள் உடனே கோயில் நிர்வாகம் மற்றும் அவினாசி போலீசாரிடம் தகவல் தெரிவித்து உள்ளனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துணை கண்காணிப்பாளர் பவுல் ராஜ் தலைமையில் விசாரணை மேற்கொண்டு உள்ளனர். இதில் முருகன் சந்நிதியில் வெண்கலத்தால் செய்த வேல் மற்றும் சேவல் கொடி உள்ள இரண்டு வேல்கள் மற்றும் உபகாரப் பொருட்கள் காணவில்லை என்பது தெரியவந்தது.
இதை அடுத்து, கோயில் பெரிய கோபுரம் உள்ள நிலைப் பகுதியில் யாரோ ஒளிந்து இருப்பது தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து போலீசார் ஒளிந்து இருப்பவனைப் பிடித்து விசாரணை மேற்கொண்டு உள்ளனர். அந்த விசாரணையில் அந்த நபர் அவினாசியை அடுத்து சாவக்கட்டுபாளையம் அருகே உள்ள வெள்ளமடை பகுதியைச் சேர்ந்த சரவண பாரதி (வயது 32) என்பதும், இன்று அதிகாலை 4 மணி அளவில் அவிநாசி லிங்கேஸ்வரர் கோயிலுக்குள் கொள்ளை முயற்சியில் ஈடுபட கோயினுள் புகுந்ததும் தெரியவந்தது.
இதை அடுத்து அந்த நபரிடம் இருந்து வெண்கலத்தால் ஆன வேல், சேவல் கொடி வேல் மற்றும் உபகாரப் பொருட்கள் எல்லாம் பறிமுதல் செய்து உள்ளனர். அதனைத் தொடர்ந்து சரவண பாரதியை கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்று தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தக் கொள்ளை சம்பவம் குறித்து இந்து அமைப்பினர் கோயில் முன்பு கோசங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இந்தச் சம்பவத்தால் இன்று கோயிலில் கால பூஜைகள் ஏதும் நடைபெறவில்லை. பக்தர்களும் அனுமதிக்கப்படவில்லை. இதனால் பக்தர்கள் வேதனை அடைந்தனர்.
இதையும் படிங்க:ஆட்சியரிடமே கைவரிசை காட்டிய கொள்ளையர்கள்... கோவையில் அதிகரிக்கும் வழிப்பறி சம்பவங்கள்!