ஏடிஎம் இயந்திரத்தில் பணம் இல்லை.. கோடாரியால் அடித்து நொறுக்கியவர் கைது! - குற்றச் செய்திகள்
வேலூர்:ஊசூர் அணைக்கட்டு பிரதான சாலை பேருந்து நிறுத்தத்தில் தனியார் வங்கியின் ஏடிஎம் ஒன்று அமைந்துள்ளது. இந்த ஏடிஎம் மையத்தில் ஊசூர் காலனியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி கந்தசாமி (53) என்பவர் திங்கள்கிழமை காலை (ஜூலை 03) பணம் எடுக்கச் சென்றுள்ளார். அப்போது, ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து பணம் வரவில்லை.
பலமுறை முயன்றும் பணம் வராததால் ஆத்திரமடைந்த கந்தசாமி கோபத்தில் தனது வீட்டுக்குச் சென்று இரும்பு கோடாரியை எடுத்து வந்து ஏடிஎம் இயந்திரத்தைச் சுக்கு நூறாக உடைத்து நொறுக்கிவிட்டார். சத்தம் கேட்டு அங்கு சென்ற அக்கம்பக்கத்தினர், கந்தசாமியை தடுத்து நிறுத்த முயன்றனர்.
ஆனால், அவர் கோபத்தின் உச்சத்தில் இருந்ததால் ஏடிஎம் இயந்திரத்தை அடித்து துவம்சம் செய்து விட்டார். தொடர்ந்து, இது குறித்து அவர்கள் அரியூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். பின்னர், சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர், கந்தசாமியை பிடித்து காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.
தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில், ஏடிஎம் இயந்திரத்தில் பணம் வராததால் கோபத்தில் அடித்து நொறுக்கியதால் கந்தசாமி கூறியுள்ளார். மேலும், அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் விசாரணையில் தெரியவந்தது. பணம் வராத ஆத்திரத்தில் இயந்திரத்தை உடைத்திருக்கிறார். ஆனால், அதிலிருந்த பணம் ஏதும் திருடுபோகவில்லை என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:மதுபோதையில் போலீசாரை ஆபாசமாகப் பேசி மிரட்டல் - 2 வழக்கறிஞர்கள் உள்பட 4 பேர் மீது வழக்கு!