கந்து வட்டிக்கொடுமை - ஆட்சியர் அலுவலகத்தில் ஒருவர் தீ வைத்து தற்கொலை முயற்சி! - ஆட்சியர் அலுவலகத்தில் தற்கொலை முயற்சி
திருவாரூர்மாவட்டம் திருமதிக்குன்னம் அருகே உள்ள காவாலக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர், சிலம்பரசன் (35). இவரது, மனைவி உமாபாரதி. இவர்களது குழந்தைகளாக பார்கவி 5ஆம் வகுப்பும், யாஷிகா 4ஆம் வகுப்பும் படித்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் கொரடாச்சேரியைச் சேர்ந்த துரை என்பவரிடம் சிலம்பரசன், ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வட்டிக்குப் பணம் வாங்கியுள்ளார்.
இந்த நிலையில் ஒரு லட்சம் பணத்தை சிலம்பரசன் திருப்பிக்கொடுத்த நிலையில் மீதி 50 ஆயிரம் ரூபாய் பணம் கொடுக்க வேண்டியிருந்துள்ளது. இந்த நிலையில் துரை என்பவர் 2 லட்சம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டியதால் சிலம்பரசன் குடும்பத்தினருடன் இன்று ( ஏப்.13 ) திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குச் சென்றார்.
இதனையடுத்து சிலம்பரசன் மட்டும் தான் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெய்யை ஊற்றிக்கொண்டு தன் உடலுக்கு தீ வைத்துக் கொண்டார். உடனடியாக அங்கு இருந்தவர்கள், அவரை மீட்டு அவசர ஊர்தி மூலம் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வந்து சிகிச்சைக்காக சேர்த்தனர். தற்போது மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
மேலும், அவருக்கு 40 விழுக்காடு தீக்காயம் ஏற்பட்டுள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து திருவாரூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கந்து வட்டிக்கொடுமையால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒருவர் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொளுத்திக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:பார் உள்ளே புகுந்து ஊழியர் மீது சரமாரி தாக்குதல்; பணத்துடன் தப்பிய நான்கு பேர் கைது!