தேனிலவுக்காக இந்தோனேசியா சென்ற புதுமண தம்பதி..கடலில் மூழ்கி உயிரிழந்த சோகம் - Chennai newlyweds drown in sea
சென்னை: பூந்தமல்லி அடுத்த சென்னீர்குப்பத்தை சேர்ந்தவர் செல்வம். இவரது மகள் விபூஷ்ணியா டாக்டராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், இவருக்கும் சென்னையைச் சேர்ந்த டாக்டராக பணிபுரிந்து வரும் லோகேஸ்வரன் என்பவருக்கும் இரு வீட்டாரின் சம்மதத்தோடு கடந்த ஜூன் 1ஆம் தேதி பூந்தமல்லியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பிரம்மாண்டமாக திருமணம் நடந்து முடிந்தது.
இதனைத்தொடர்ந்து, திருமணம் நடந்து முடிந்த கையோடு இந்த புதுமண தம்பதிகளான இருவரும் தேனிலவுக்காக இந்தோனேசியா நாட்டிற்கு சென்றனர். இந்த நிலையில், நேற்று (ஜூன் 9) அங்குள்ள சுற்றுலா தளத்தில் உள்ள கடலில் மோட்டார் போட்டில் சென்று கொண்டிருந்தனர். இதனிடையே அப்போது, இவர்கள் போட்டோ ஷூட் நடத்தியதாக கூறப்படுகிறது. இதில் எதிர்பாராத விதமாக நிலைதடுமாறிய இருவரும் திடீரென கடலில் விழுந்ததில் இருவரும் நீரில் முழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதையடுத்து அங்கிருந்தவர்களின் உதவியுடன் லோகேஸ்வரன் உடலை மீட்டு விட்டதாகவும், விபூஷ்னியா உடலை தீவிரமாகத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக தகவல் வெளியானது. இந்த தகவல் விபூஷ்னியா வீட்டிற்கு தெரியவந்த நிலையில், அவரது வீட்டின் முன்பு உறவினர்களும், பெற்றோர்களும் கதறி அழுதனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், உயிரிழந்த இருவரின் உடல்களும் சென்னைக்கு எடுத்து வரும் பணி நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இவ்வாறு திருமணம் முடிந்த ஜோடிகள் தேனிலவுக்காக சென்ற வெளிநாடு இடத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.