கண் அசந்த நேரத்தில் செல்போன் திருட்டு : மர்ம நபர் கைவரிசை! - etvbharat tamil
Published : Sep 6, 2023, 12:18 PM IST
திண்டுக்கல்:பழனியில் இரவு நேரத்தில் தனியார் விடுதியில் ஊழியர் தூங்கிக் கொண்டிருந்த போது மர்ம நபர் ஒருவர் செல்போனை திருடி செல்லும் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் மலையைச் சுற்றி நூற்றுக்கும் மேற்பட்ட தனியார் விடுதிகள் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், நேற்று (செப் 5) அதிகாலை தனியார் விடுதியில் ஊழியர் ஒருவர் இரவுப் பணியின் போது வரவேற்பு அறையில் உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் விடுதியை நோட்டமிட்டபடி உள்ளே நுழைந்து மேசையின் மேல் இருந்த செல்போனை லாவகமாக திருடி சென்ற சிசிடிவி காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இது குறித்து தனியார் விடுதி ஊழியர் அடிவாரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சிசிடிவி காட்சிகளை வைத்து புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும், செல்போனை திருடிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.