CCTV: ஓட்டுநர், நடத்துநரை மதுபோதையில் சென்ற ஆசாமிகள் கல்லால் தாக்கி அட்டூழியம்
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே பாலசமுத்திரம் பேரூராட்சிக்குச் செல்ல 7க்கும் மேற்பட்ட மினி பேருந்துகளும் ஒரு அரசுப்பேருந்தும் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு பழனி பேருந்து நிலையத்திலிருந்து பாலசமுத்திரம் நோக்கி சென்ற மினி பேருந்தில் போதையில் ஒருவர் ஏறி உள்ளார். அப்போது பெண் ஆய்வாளர் தடுத்து, அந்த போதையில் இருப்பவரை கீழே இறக்கி உள்ளார்.
இதில் ஆத்திரம் அடைந்த குடிபோதை ஆசாமிகள், ராமநாதன் நகர் அருகில் மினி பேருந்து சென்று கொண்டிருந்தபோது மூன்று நபர்களுடன் வந்து பேருந்துக்குள் ஏறி ஓட்டுநரையும் நடத்துநரையும் கல்லால் தாக்கியும், பேருந்தின் கண்ணாடியை உடைத்தும் ரகளையில் ஈடுபட்டுள்ளனர். அந்தக் காட்சிகள் அனைத்தும் பேருந்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
இதுகுறித்து பழனி அடிவாரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி மினி பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள் பேருந்துகளை இயக்காமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் இன்று பங்குனி உத்திரத்தை முன்னிட்டு பேருந்து நிலையத்தில் திருஆவினன்குடி செல்லும் பக்தர்களும், பாலசமுத்திரத்தில் பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவ, மாணவிகளும் அவதி அடைந்துள்ளனர்.
இரவு நேரத்தில் ஓட்டுநர்களும், நடத்துநர்களும் பேருந்துகளை இயக்காமல் தங்களுக்கு ஏதும் பணிப் பாதுகாப்பு இல்லை எனக்கூறி போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.