புகாரை விசாரிக்கத் தாமதம்: கரூரில் செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த நபரால் பரபரப்பு.. - karur news
Published : Dec 25, 2023, 11:02 PM IST
கரூர்: கரூர் மாவட்டம் ராமானுஜம் நகர் என்ற பகுதியில் வசிக்கும் தியாகராஜன் (45). இவர் கரூரில் உள்ள தனியார் பேருந்து கூண்டு கட்டும் தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், கரூர் நகரக் காவல் நிலையத்தில் கடந்த மாதம், நிலத் தகராறு தொடர்பாகப் புகார் ஒன்றை அளித்திருந்தார்.
அந்தப் புகாரின் பேரில் கரூர் நகரக் காவல் துறை நடவடிக்கை மேற்கொள்ளாமல், அலக்கழித்ததால் விரக்தியில் இன்று (டிச.25) காலை 8 மணி அளவில் ராமானுஜம் நகரில், 150 அடி உயரமுள்ள செல்போன் கோபுரம் மீது 40 அடியில் ஏறி, கரூர் நகரக் காவல் துறை தனது புகார் மீது நடவடிக்கை எடுக்காததால், தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டல் விடுத்துள்ளார்.
இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கரூர் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் அளித்தனர். இதனை அடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த, தீயணைப்பு படை வீரர்கள் தியாகராஜனிடம் சமாதானம் பேசி 4 மணி நேரம் போராட்டத்திற்குப் பிறகு பத்திரமாக மீட்டு, கீழே இறக்கினர்.
உயிருடன் மீட்கப்பட்ட தியாகராஜனை, 108 ஆம்புலன்ஸ் மூலம் கரூர் காந்திகிராமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிப்பதற்காக அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாகக் கரூர் நகர காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.