Video:'ஹே மீச... வாயா இங்குட்டு' - காட்டுயானையை வம்பிழுத்த போதை ஆசாமி! - மதம் பிடித்த யானை
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த ஒகேனக்கல் சாலையில் காட்டு யானை ஒன்று நின்றுள்ளது. இதனைக் கண்ட போதையில் இருந்த மீசைக்காரர் ஒருவர், திடீரென யானையை நோக்கிச் சென்றார். பின்னர், யானையை கையெடுத்து கும்பிட்டவாறு சிறிது நேரம் கண்களை மூடி வணங்கினார்.
இதனைக் கண்ட யானை சற்று பின்வாங்கி காட்டுக்குள் போனது. ஆனால் அந்த ஆசாமி யானையை விடுவதாக இல்லை. தொடர்ந்து யானையை நோக்கிச் சென்று காலில் விழுந்தார். பின்னர், தனது கைகளை தூக்கியவாறு யானையிடம் சரண் அடைவதுபோல போஸ் கொடுத்தார்.
இதனைக் கண்ட சுற்றி இருந்தவர்கள், ‘ஹே மீசை... வாயா இங்குட்டு’ என சத்தம்போட்டு அழைத்தனர். ஆனால், எதையுமே காதில் வாங்காத மீசைக்காரர், யானையை வம்பிழுத்தபடி இருந்தார். பின்னர், ஒருவழியாக அங்கிருந்து நடந்து சென்றார். இதனை அங்கு காரில் சென்றவர்கள், தங்களது செல்போனில் வீடியோ எடுத்து, சமூக வலைதளங்களில் வெளியிட்டனர்.
தற்போது அந்த வீடியோ வைரலாகப் பரவி வருகிறது. வழக்கமாக யானைகள் மனிதர்களை துரத்தும் அல்லது சில யானைகள் மனிதர்களைத் தாக்கும். ஆனால், இந்த யானை தன்னிடம் வம்பிழுத்த போதை ஆசாமியை எதுவும் செய்யாமல் அவர் செய்த சேட்டையை பொறுத்துக்கொண்டு அங்கிருந்து சென்றது.
இதையும் படிங்க:யானை பாகன்களுக்கு முதலமைச்சர் அறிவித்த நிவாரண நிதியில் பாரபட்சம்? - அதிகாரிகள் விளக்கம் என்ன?