நாமக்கல் கார் விபத்து: ஒருவர் பலி; பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி! - hit by a car and killed in Namakkal
Published : Sep 13, 2023, 2:01 PM IST
|Updated : Sep 13, 2023, 2:17 PM IST
நாமக்கல்:நாமக்கல் மாவட்டம் தில்லைபுரத்தைச் சேர்ந்தவர் ஞானசேகரன் (60). இவர் நேற்று (செப்.12) தனது இரு சக்கர வாகனத்தில் கீரம்பூர் சுங்கச்சாவடி அருகே எதிர் திசையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அதே சாலையில் கரூரில் இருந்து சேலம் நோக்கி சென்ற சொகுசு கார் ஒன்று, கீரம்பூர் சுங்க சாவடி அருகே வளைவில் அதிவேகமாக வந்துள்ளது.
ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த கார், எதிர் திசையில் பயணம் செய்த முதியவர் ஞானசேகரனின் பைக் மீது மோதியதோடு,பம்பரம் போல் சுழன்று கவிழ்ந்தது. இதில், முதியவர் ஞானசேகரன் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், காரில் பயணம் செய்த பாலுசாமி, ராஜன் மற்றும் சந்தோஷ் ஆகியோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு, நாமக்கல் மாவட்ட தலைமை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்து குறித்து பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், விபத்தின் சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.