குடிக்க பணம் இல்லாததால் கோயில் உண்டியல் உடைப்பு.. இளைஞருக்கு தர்ம அடி.. - போலீசாரிடம் ஒப்படைத்த சம்பவம்
திருநெல்வேலி:கண்ணை மறைதத போதையினால் நெல்லையில் மது அருந்த பணம் கிடைக்காததால் கோயில் பூட்டை உடைத்து உண்டியல் பணத்தை திருடிய குடிமகனுக்கு ஊர் பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் விக்கிரமசிங்கபுரம் சேனைத் தலைவர் பள்ளியின் அருகிலுள்ள முத்தாட்சி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த முத்தாட்சியம்மன் கோயிலில் திருப்பணி நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் விக்கிரமசிங்க புரம் பகுதியை சேர்ந்த பிச்சைகண்ணு மகன் தங்கபாண்டி (24) என்பவர் மது அருந்த பணம் இல்லாததால் கோயிலில் உண்டியல் பூட்டை உடைத்து கோயிலுக்கு சொந்தமான ரூபாய் 1500 பணத்தை திருடியுள்ளார்.
வாரக்கணக்கில் சரக்கடிக்கும் அளவுக்கு பெரிய தொகையை எதிர்பார்த்த தங்கபாண்டிக்கு உண்டியலில் வெறும் 1500 மட்டுமே இருந்தது அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இருப்பினும் கிடைத்த வரை லாபம் என்ற எண்ணத்தில் சம்பவ இடத்தைவிட்டுச் செல்ல முயன்றுள்ளார். இச்சம்பவத்திற்கு முன்னதாக தங்கபாண்டியன் உண்டியலை உடைக்கும் சத்தம் கேட்டு கோயில் முன்பு ஊர் பொதுமக்கள் திரண்டுள்ளனர்.
ஏற்கனவே மது அருந்த பணம் கேட்டு பலரிடம் தகராறு செய்ததாகவும், அதற்காகவே தங்கபாண்டி கோயில் உண்டியலை உடைத்தார் என்பதும் பொதுமக்கள் சுற்றிவளைத்து பிடித்து விசாரித்தபோது தெரியவந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் உண்டியல் பணத்தை திருடிய தங்கபாண்டியை பிடித்து வைத்து தர்ம அடி கொடுத்துள்ளனர்.
மேலும் இதுகுறித்து விக்கிரமசிங்கபுரம் போலீசாருக்கு பொது மக்கள் தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்துச் சென்ற காவல்துறை தங்கபாண்டியை கைது செய்து வழக்கு பதிவு செய்துள்ளனர். மது அருந்த பணம் இல்லாததால் கோயில் உண்டியலை உடைத்து கொள்ளையடித்த குடிமகனின் செயல் அப்பகுதி மக்கள் இடையே அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:பாறப்பட்டியில் களைகட்டிய மாடு மாலை தாண்டும் திருவிழா!