"சரக்கு வாங்க காசு இல்லை" ஏடிஎம் மெஷினை உடைத்த நபரின் பகீர் வாக்குமூலம்! - ஏடிஎம்யை உடைத்து திருட முயற்சி
சென்னை: கே.கே.நகர் முனுசாமி சாலையில் தனியார் வங்கிக்கு (DBS) சொந்தமான ஏடிஎம் ஒன்று செயல்பட்டு வருகிறது. நேற்று அதிகாலை ஏடிஎம் மையத்தில் புகுந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கைகளாலும், கல்லாலும் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து அதில் உள்ள பணத்தைத் திருட முயன்றுள்ளார். அப்போது ஹைதராபாத்தில் உள்ள வங்கி தலைமை அலுவலகத்தில் அபாய ஒலி அடித்ததால் உஷாரான வங்கி ஊழியர் சாய்பிரேம் உடனடியாக கே.கே.நகர் காவல் நிலையத்திற்குத் தகவல் அளித்துள்ளார்.
பின்னர் கே.கே.நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்த போது ஏடிஎம் இயந்திரம் உடைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. மேலும் கொள்ளையன் ஏடிஎம் இயந்திரத்தை முழுவதும் உடைக்க முடியாததால் பாதியில் விட்டுச் சென்றதும், இதனால் ஏடிஎம் இயந்திரத்திலிருந்த பணம் தப்பியதும் தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து வங்கி அதிகாரி வினோத் குமார் கொடுத்த புகாரின் அடிப்படையில் கே.கே நகர் போலீசார் இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்தனர். பின் ஏடிஎம் மையத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். அந்த சிசிடிவி காட்சியில் பதிவான முக அடையாளங்களை வைத்து எம்.ஜி.ஆர் நகர் நெசப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த அசோக் (24) என்பவரைத் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த அசோக், சென்னையில் தங்கி ஸ்வீகி ஊழியராக பணியாற்றி வந்துள்ளார். ஏற்கனவே அசோக் மீது திருவண்ணாமலை காவல் நிலையத்தில் இரண்டு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரிய வந்துள்ளது. குறிப்பாக நேற்று அதிகாலை மதுபோதையில் இருந்த அசோக் மீண்டும் குடிக்க பணமில்லாததால் போதையில் ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முயற்சி செய்ததாகவும், உடைக்க முடியாததால் வெளியே இருந்து கல்லை கொண்டு வந்து சுமார் 15 நிமிடமாக உடைக்க முயற்சி செய்த போது அலாரம் ஒலித்ததால் பயந்து ஓடி விட்டதாக வாக்குமூலம் அளித்துள்ளார். தற்போது கல்லை கொண்டு ஏடிஎம் இயந்திரத்தை உடைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.