தீக்கிரையான 30 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி.. திருத்தணி அருகே நிகழ்ந்த கோர விபத்து! - rice
திருவள்ளூர்:பொன்னேரி அருகில் உள்ள பஞ்செட்டி அரசு ரேஷன் அரிசி குடோனில் இருந்து வேலூர் மாவட்டம் திருவலம் அரசு குடோனுக்கு ரேஷன் அரிசி ஏற்றிக்கொண்டு சென்ற லாரி, திருத்தணி தொகுதி ஆர்.கே.பேட்டை தாலுகா சின்னநாகபூடி மாநில நெடுஞ்சாலை பகுதியில் வரும் பொழுது திடீரென லாரி டயர் வெடித்து தீ பற்றி எரிந்துள்ளது.
அதனைக் கண்டவுடன் லாரியை ஓட்டி வந்த ஓட்டுநர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் சாலையில் நடுவே தீப்பற்றி எரிந்து கொண்டிருந்த லாரியைக் கண்ட பொதுமக்கள் அருகில் உள்ள ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் தீயணைப்பு படை வீரர்களுக்குத் தகவல் அளித்துள்ளனர். அந்த தகவலின் படி விரைந்து வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீ பற்றி எரிந்த சுமையுந்தை அணைக்க முயற்சித்தனர்.
ஆனால் தீயை அணைப்பதற்குள் லாரி 90 சதவீதம் எரிந்தது. மேலும் அதிலிருந்த ரேஷன் அரிசி 80 சதவீதம் தீயில் எரிந்து நாசமானது. லாரியில் இருந்த ரேஷன் அரிசி சுமார் 30 டன் அதாவது 30 ஆயிரம் கிலோவாகும். தற்போது இந்த விபத்து சம்பவம் குறித்து ஆர்.கே.பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். சாலையின் நடுவே ரேஷன் அரிசி லாரியில் தீ பற்றி எரிந்ததால் அப்பகுதியில் சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.