கொங்கர்பாளையத்தில் அட்டாகாசம் சிறுத்தை சிக்கியது.. வனத்துறையின் அசத்தல் ஆபரேஷன்! - மோதூர்
ஈரோடு:கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள கொங்கர்பாளையம், மோதூர் உள்ளிட்ட பகுதிகளில் கால்நடைகளை வேட்டையாடி வந்த சிறுத்தை வனத்துறையினர் வைத்த கூண்டில் பிடிபட்டது. கூண்டில் பிடிபட்ட சிறுத்தையை டி.என்.பாளையம் வனத்துறையினர் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட தெங்குமரஹாடா அடர் வனப்பகுதியில் விட்டனர்.
கோபிசெட்டிபாளையம் அடுத்த கொங்கர்பாளையம் ஊராட்சி பகுதிகளில் ஆடு, மாடு எனக் கால்நடைகளை வேட்டையாடி வந்த சிறுத்தை ராமசாமி என்பவரது தோட்டத்தில் கட்டி வைக்கப்பட்ட கன்றுக் குட்டியைக் கடந்த மூன்று வாரங்களுக்கு முன்பு கடித்துக் கொன்றது.
அதற்கு முன்பாக அதே பகுதியில் நஞ்சப்பன் என்கிற முருகேசன் என்பவரது தோட்டத்தில் கட்டி வைத்திருந்த ஆடு ஒன்றைக் கடித்துக் கொன்றது. அதைத் தொடர்ந்து டி.என் பாளையம் வனத்துறையினர் ராமசாமி என்பவரது தோட்டத்தில் 5 இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு சிறுத்தை நடமாட்டம் உறுதி செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து டி.என் பாளையம் வனத்துறையினர் அந்த சிறுத்தை நடமாட்டம் உள்ள பகுதிகளில் கூண்டு வைத்து சிறுத்தை பிடிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
நேற்று அதிகாலை சிறுத்தை, வனத்துறை வைந்திருந்த கூண்டில் சிக்கியது. அதைத் தொடர்ந்து சிறுத்தை பவானிசாகர் அடுத்த தெங்குமரஹாடா வனப்பகுதியில் கொண்டு விடப்பட்டது. கூண்டில் பிடிபட்டது 4 வயதான பெண் சிறுத்தை என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.