கோவை அருகே ஊருக்குள் நுழைய காத்திருக்கும் யானைக் கூட்டம்.. வைரலாகும் வீடியோ.. ! - யானை வைரல் வீடியோ
Published : Dec 14, 2023, 9:40 PM IST
கோவை: கோவை மாவட்டம் தடாகம் வனப்பகுதியில் 30க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. இந்த யானைகள் இரவு நேரங்களில் அருகில் உள்ள கிராமங்களில் புகுந்து விவசாய பயிர்களைச் சேதப்படுத்தி வருவதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், இந்த யானைகள் வனப்பகுதியிலிருந்து வெளிவரும் போது மீண்டும் வனப்பகுதிக்குள் திருப்பி அனுப்ப வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் தடாகம் அடுத்த பொன்னூத்து வனப்பகுதியில் 10க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் நேற்று (டிச.14) மாலை ஊருக்குள் புகுவதற்குத் தயாராக வன எல்லையில் நின்று கொண்டிருந்தது. இதனை அப்பகுதி இளைஞர்கள் வீடியோவாக எடுத்துப் பதிவிட்டுள்ளனர். தற்போது அந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இது குறித்து விவசாயி கூறுகையில்; "ஊருக்குள் காட்டு யானைகள் நுழைவதைக் கட்டுப்படுத்த வேண்டும் என வனத்துறையினருக்கு நாள் தோறும் கோரிக்கை விடுத்து வருகின்றோம். ஆனால் கட்டுப்படுத்த முடியவில்லை. வனத்திலிருந்து யானைகள் வெளியேறும் போது அவை திருப்பி அனுப்பப்பட்டால் ஊருக்குள் வருவது குறைந்து விடும்.
நேற்று (டிச.13) யானைக் கூட்டம் வனப்பகுதியை ஒட்டி நின்று கொண்டிருந்த நிலையில், வனத்துறையினர் அங்கு வந்திருந்தால் அதனை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டி இருக்கலாம். ஆனால் யானைகள் ஊருக்குள் வரும் வரை வனத்துறையினர் காத்திருந்ததாகவும், மாலை நேரங்களில் வனத்திலிருந்து வெளியே வரும்போதே யானைகளை மீண்டும் வனத்திற்குள்ளேயே விரட்ட வேண்டும்" என கோரிக்கை விடுத்துள்ளனர்.