வேளச்சேரியில் ஆலங்கட்டி மழை - உற்சாகத்தில் திளைத்த மக்கள்! - Latest Chennai news
சென்னையில் காலை முதல் நகர் மற்றும் புறநகர் பகுதியில் விட்டு விட்டு மழை கொட்டி வருகிறது. வளிமண்டல கீழடுக்குச் சுழற்சி காரணமாக மழை கொட்டி வருவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. கோடை வெயில் சுட்டெரிக்க தொடங்கி உள்ள நேரத்தில் திடீரென மழை பெய்ததால் நகரவாசிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
இந்நிலையில், வேளச்சேரி பகுதியில் திடீரென ஆலங்கட்டி மழை பெய்தது. எதிர்பாராத விதமாக கொட்டிய ஆலங்கட்டி மழையை கண்டு மக்கள் ஆச்சரியம் அடைந்தனர். சாலைகளில் கொட்டிய ஐஸ் கட்டிகளை கையில் எடுத்து பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் மழையில் நனைந்தவாறு கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
பிப்ரவரி மாதத்தில் இருந்து வெயில் வாட்டி வதைத்த நிலையில் தற்போது மழை பெய்ததால் பொதுமக்கள் குளிச்சியை உணர்ந்து மகிழ்கின்றனர். மேலும் ஆலங்கட்டி மழை பெய்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிகம் பேரால் பகிரப்பட்டு வருகிறது. அதேபோல் குரோம்பேட்டை, தாம்பரம் உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் காலையில் லேசான மழை பெய்தது.
இதனிடையே தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.