ஈரோடு மாட்டு சந்தையில் நடந்த நூதன மோசடி.. கர்நாடக ஆசாமியை முற்றுகையிட்ட வியாபாரிகள் - A fraud committed against other state traders
ஈரோடு: ஈரோடு கருங்கல்பாளையம் காவேரி ஆற்றின் பகுதியில் மாவட்ட எல்லையில் மாட்டு சந்தை அமைந்துள்ளது. இந்த மாட்டு சந்தையில் ஈரோடு மாவட்டம் மட்டும் இன்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டத்தில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் வருகை தந்து வாரம் தோறும் வியாழக்கிழமை அன்று நடைபெறும் சந்தையில் மாடுகளை வாங்கவும் விற்கவும் செய்கின்றனர். மேலும் பல நூறு கோடி ரூபாய் வரையிலான வர்த்தகம் இந்த மாட்டு சந்தையின் மூலம் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் வெளி மாநில பதிவு எண் கொண்ட வியாபாரிகளை மட்டும் குறிவைத்து கொவுடா என்ற நபரும் அவரது கூட்டாளிகளும் கர்நாடக பதிவு எண் கொண்ட காரில் வந்து அதிகாரிகள் என குறி 5 ஆயிரம் ரூபாய் வரை ஒவ்வொரு வாகனத்திற்கும் வசூல் செய்து மோசடியில் ஈடுபட்டு வருவதாக வெளி மாநில வியாபாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
அதே போல் ஈரோடு மாநகராட்சி மற்றும் கால்நடை துறை என கூறி ரசீது வழங்கி 3 ஆயிரம் ரூபாய் வரையில் பணம் வசூல் செய்யபடுவதாகவும் ரசீதில் எவ்வளவு பணம் என்பது குறிப்பிடாமல் ரசீது கொடுத்து பணம் வாங்க படுவதாகவும் வியாபாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் மாவட்ட நிர்வாகம் இது போன்ற மோசடியை தடுத்து வெளி மாநில வியாபாரிகளை பாதுகாக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.