பாபு... ஸ்நேக் பாபு... வேலூரில் மது போதையில் பாம்புடன் ரகளை செய்த நபர்! - ஸ்நேக் பாபு
வேலூர்:வேலூர் மாவட்டம், பழைய பேருந்து நிலையம் பின்புறம் 2 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகிறது. இந்த டாஸ்மாக் கடை முன்பு, குடிபோதையில் பாபு என்ற (ஸ்நேக் பாபு) பாம்பு பிடிக்கும் நபர், தான் வைத்திருந்த சாக்கு பையில் இருந்து சாரைப் பாம்புவை வெளியே எடுத்து, முத்தமிட்டு ரகளை செய்துகொண்டிருந்தார். மேலும், மது வாங்க வரும் நபர்களிடம் பாம்பை காட்டி பயமுறுத்தி 10 ரூபாய், 20 ரூபாய் என வசூல் செய்து அந்தப் பணத்தை வைத்து மீண்டும் மது வாங்கி குடித்துக்கொண்டு ரகளை செய்து வந்துள்ளார். பணம் கொடுக்காத நபர்கள் மீது பாம்பை விட்டு விடுவேன் என்று பயமுறுத்தியுள்ளார்.
இது சம்பந்தமாக, வேலூர் வடக்கு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். இத்தகவலறிந்து உடனடியாக விரைந்து வந்த போலீசார் பாபுவை வீட்டிற்கு போகும்படி சொல்லி அறிவுறுத்தியுள்ளனர். ஆனால், 'சார் உங்கள் வீட்டில் பாம்பு வந்தால் அதை நான் தான் பிடிக்க வரணும்' என்று காமெடியோடு கூறியுள்ளார். மேலும், எதற்கும் அசராத பாபு அங்கிருந்து போக மறுத்தார். பாபுவை விரட்ட வந்த போலீஸ் வந்த வழியே செல்ல, ’’என்னை ஒன்றும் பண்ண முடியாது; நானே சென்றால் தான் உண்டு’’ எனக் கூறி, பாம்பை பையில் போட்டுக் கொண்டு அவராக 30 நிமிடங்கள் கழித்து அங்கிருந்து சென்றார். இதனால் பழைய பேருந்து நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.