"எங்க தலைக்கு தில்ல பாத்தீங்களா.." நடுரோட்டில் சேர் போட்டு அமர்ந்து மதுப்பிரியர் அட்டகாசம்... வைரல் வீடியோ! - மதுப்பிரியர்
Published : Nov 1, 2023, 10:21 AM IST
வேலூர்: குடியாத்தம், காட்பாடி செல்லும் சாலையில் இரவு நேரத்தில் நடுரோட்டில் நாற்காலியை போட்டு அமர்ந்து கொண்டு, வாகன ஓட்டிகளுக்கு மர்ம நபர் இடையூறு அளிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதுகுறித்து வாகன ஓட்டிகள் குடியாத்தம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்து உள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், நடுரோட்டில் நாற்காலி போட்டு ஒய்யாரமாக அமர்ந்தவாறு, வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்திக் கொண்டு இருந்த மதுப் பிரியரை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். மது போதை ஆசாமியால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
மேலும், இருசக்கர வாகனத்தில் வேலைக்கு சென்று வீட்டிற்கு வரும் பெண்கள், இதனால் மிகவும் அச்சமடைந்ததாகவும் கூறப்படுகிறது. தற்போது நடுரோட்டில் அமர்ந்து அலப்பறை கொடுத்த மது பிரியரின் வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. இதுபோன்று போதையில், பொது மக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் தொல்லை கொடுப்பவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.