மான் கொம்பு... பில்லி சூனியம்; நிர்வாண பூஜையால் சிக்கிய சாமியார்: தேனியில் நடந்தது என்ன? - போலி சாமியார்
தேனி:கம்பம் பகுதியில் உள்ள கணபதி அக்ரஹாரத் தெருவைச் சேர்ந்தவர், சௌந்தரராஜன். இவரது வீட்டில் முருகன் என்பவர் கடந்த சில நாட்களாக வாடகைக்கு வசித்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தன்னை சித்தர் என்று கூறிக் கொள்ளும் முருகன், வாடகை வீட்டில் சித்தர் குடில் என்று பலகை வைத்து, இரவு நேரத்தில் சங்கு ஊதி அப்பகுதி மக்களுக்கு இடையூறு செய்வதாகவும்;
மேலும் வாடகை வீட்டில் மாந்திரீக பூஜை, நிர்வாண பூஜைகள், பில்லி சூனியம் போன்றவை செய்வதாகவும்; இதை கேட்க சென்ற வீட்டின் உரிமையாளருக்கு கொலை மிரட்டல் விடுக்கிறார் என்றும் அவர் மீது தேனி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் உள்ளது.
அதைத் தொடர்ந்து, தற்போது நேற்று மாலை முருகன் ஒரு நபருடன் இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு வந்து தன் வீட்டில் இருந்த மான் கொம்பை துணியால் கட்டி அதை இருசக்கர வாகனத்தில் எடுத்துச் சென்றுள்ளார். இதை கண்ட வீட்டின் உரிமையாளர் இந்தச் சம்பவம் குறித்து தேனி மேகமலை வனக்கோட்ட புலிகள் காப்பக வனத்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். அந்த புகாரை பெற்றுக் கொண்ட வனத்துறையினர் மான்களை வேட்டையாடி மான் கொம்பை பதுக்கி வைத்திருக்கின்றாரா என விசாரணை நடத்தி வருகின்றனர்.