விளா முண்டி வனப்பகுதியை விட்டு வெளியேறிய கரடி.. ஊருக்குள் நடமாடும் சிசிடிவி காட்சி! - Forest Department
Published : Jan 8, 2024, 1:28 PM IST
ஈரோடு: சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 10 வனச்சரங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தை ஒட்டி உள்ள கிராமங்களில் இரவு நேரத்தில் புலி, சிறுத்தை, யானை, கரடி, மான், காட்டெருமை ஆகிய வனவிலங்குகள் அருகாமையில் உள்ள கிராமங்களில் புகுந்து நடமாடுவதும், விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள பயிர்களைச் சேதப்படுத்துவது வாடிக்கையாக உள்ளது.
இந்நிலையில், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் விளா முண்டி வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒரு கரடி வெள்ளாளப்பாளையம் பிரிவு பகுதியில் உள்ள சாலையில் நடமாடியது. கரடி நடமாட்டத்தைக் கண்ட கிராம மக்கள் அச்சமடைந்து உள்ளனர்.
இதற்கிடையே ஊருக்குள் புகுந்து சாலையில் நடமாடிய கரடி சிறிது நேரம் கழித்து வனப்பகுதிக்குள் சென்று மறைந்தது. இந்த நிலையில் கரடி சாலையில் நடமாடிய காட்சிகள் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. கரடி நடமாட்டம் உள்ளதால் பொதுமக்கள் எச்சரிக்கையாகவும், இரவு நேரத்தில் வெளியே வருவதைத் தவிர்க்குமாறும் வனத்துறையினரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.