நாமக்கல்லில் மீண்டும் ஒரு சிலிண்டர் விபத்து..! பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது எப்படி?
Published : Oct 6, 2023, 9:02 PM IST
நாமக்கல்:ஈரோடு மாவட்டத்திலிருந்து நாமக்கல் நோக்கி, சுமார் 50 காலி சிலிண்டர்களுடன் வந்து கொண்டிருந்த தனியார் எரிவாயு சிலிண்டர் நிறுவனத்திற்குச் சொந்தமான சரக்கு ஆட்டோவை, ஈரோட்டைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் இயக்கிக் கொண்டு வந்துள்ளார்.
அப்போது திருச்செங்கோடு நாமக்கல் இடையே உள்ள எர்ணாபுரம் என்கிற பகுதி அருகே வந்து கொண்டிருந்த, காலி சிலிண்டர்களை ஏற்றி வந்த ஆட்டோவின் பேட்டரி பகுதியிலிருந்து கரும்புகை வெளியேறியுள்ளது. இதனைக் கண்டு சுதாரித்துக் கொண்ட ஓட்டுநர், உடனடியாக ஆட்டோவை சாலையின் ஓரமாக நிறுத்தியுள்ளார்.
பின்னர், கரும்புகை தீயாக மாறி வேகமாக எரிய துவங்கியுள்ளது. இதனை அடுத்து ஆட்டோ ஓட்டுநர் நாமக்கல் தீயணைப்புத் துறையினருக்கு அளித்த தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். இருப்பினும் ஆட்டோவின் முன் பகுதி முற்றிலுமாக எரிந்து கருகியது.
மேலும் ஆட்டோவில் இருந்த சிலிண்டர்கள் அனைத்தும் காலியாக இருந்ததால், பெரும் அசம்பாவிதம் ஏற்படுவது தவிர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து நல்லிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாமக்கல்லில் அடுத்தடுத்து நடைபெறும் சிலிண்டர் தொடர்புடைய விபத்துகள் மக்கள் மத்தியில் பரபரப்பை அதிகரித்துள்ளது.