வந்தவாசி அருகே நடுரோட்டில் திடீரென பற்றி எரிந்த பைக்! - tamilnadu news
Published : Jan 7, 2024, 3:58 PM IST
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த சோகத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் (29). இவரது வீட்டுக் குழந்தையின் முதல் பிறந்தநாள் விழா திண்டிவனம் சாலை தனியார் மண்டபத்தில் நேற்று (ஜன.6) நடைபெற்றது.
இந்நிலையில் மணிகண்டன் கோழி இறைச்சி வாங்குவதற்காக, காதர் ஜன்டா தெருவில் உள்ள இறைச்சிக் கடையில் கோழி இறைச்சிக்குச் சொல்லிவிட்டு, எதிரில் உள்ள ஹோட்டலில் சிற்றுண்டி சாப்பிட்டுக் கொண்டிருந்துள்ளார். அப்போது பைக்கில் இருந்து புகை வெளியேறி, பைக் திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கி உள்ளது.
பைக் பற்றி எரிவதைப் பார்த்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் தண்ணீர், கோணிப்பை கொண்டு தீயை அணைக்க முயன்று உள்ளனர். இருந்த போதிலும், பைக் முழுவதுமாக எரிந்து சேதமானது. பின்னர், அந்த பைக்கை உரிமையாளர் தள்ளிக்கொண்டு சென்றார்.
சாலையில் நின்று கொண்டிருந்த பைக்கில் திடீரென தீ பற்றி எரிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பைக் பற்றி எரிந்த வீடியோ இணையத்தில் வரலாகப் பரவி வருகிறது. இது குறித்து வந்தவாசி தெற்கு காவல் நிலைய போலீசார் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.