இரவு நேரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய பலூன்.. வேலூரில் திகில் சம்பவம்! - Climate Weather Forecast
வேலூர்: வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த லிங்குன்றம் பகுதியில் நேற்று (ஜூன் 18) இரவு 7 மணி அளவில் வானில் இருந்து வெடித்து விழுந்த மர்ம பலூன் மற்றும் ரிமோட்டால் அப்பகுதி மக்கள் வெடிகுண்டு என நினைத்து பீதி அடைந்தனர். இது குறித்து அப்பகுதி மக்கள் வருவாய்த்துறை மற்றும் காவல் துறையினருக்குத் தகவல் அளித்தனர். தகவலின் பெயரில் விரைந்து வந்த குடியாத்தம் போலீசார் வெடித்த பலூன் மற்றும் ரிமோட்டை கைப்பற்றி, அதிலிருந்த போன் நம்பரைத் தொடர்பு கொண்டு விசாரணை மேற்கொண்டனர்.
முதற்கட்ட விசாரணையில், சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள இந்திய வானிலை ஆராய்ச்சி மையத்துக்கு (Indian Meteorological Research Centre) சொந்தமான பலூனை ரிமோட்டுடன் நேற்று (ஜூன் 18) மாலை 4.30 மணிக்கு பறக்கவிட்டதாக கூறினார்கள். மேலும் இந்த பலூன் ரிமோட் நில அதிர்வு (Earth quake) மற்றும் தட்பவெப்பநிலை வானிலை முன்னறிவிப்பு (Climate Weather Forecast) உள்ளிட்டவைகளுக்குப் பயன்படுத்தப்படுவதாகவும், இதனால் யாருக்கும் எந்தப் பாதிப்பும் இல்லை எனவும் கூறினார்கள்.
இதனை அடுத்து வானில் இருந்து வெடித்து கீழே விழுந்த பலூன் மற்றும் ரிமோட்டைக் கைப்பற்றி குடியாத்தம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கிராமப்புறப் பகுதியில் இரவு நேரத்தில் வெடித்து, கீழே விழுந்த பலூன் மற்றும் ரிமோட்டை கண்டு அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்ததால், அந்த பகுதியைச் சுற்றி பெரும் பரபரப்பு ஏற்பட்டது.