கோவையில் களைகட்டும் கிறிஸ்துமஸ் பண்டிகை! தனியார் மாலில் 50 அடி உயர பிரம்மாண்ட ஈபிள் கோபுரம்! - கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனை
Published : Dec 22, 2023, 11:37 AM IST
கோவை: கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்கி வரும் நிலையில் அனைத்து தேவாலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்று வருகிறது. பல்வேறு கிறிஸ்துவ கல்வி நிலையங்களில் இயேசு கிறிஸ்துவின் பிறப்பு, அவரது வாழ்க்கை குறித்து நாடகங்கள் அரங்கேற்றப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் மால் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. ஆங்காங்கே கிறிஸ்துமஸ் மரங்களும், அலங்கார தோரணங்களுடன் முகப்பு வாயிலும் அமைக்கப்பட்டுள்ளன.
இதேபோல் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் சுமார் 50 அடி உயரத்தில் உலக புகழ் பெற்ற ஈபிள் கோபுர மாதிரி அமைக்கப்பட்டுள்ளது. வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ள இந்த மாதிரி கோபுரம் சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரையும் வெகுவாக கவர்ந்துள்ளது.
வருகிற 31ஆம் தேதி வரை இந்த டவர் காட்சிப்படுத்தப்பட உள்ளதுடன் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக வளாகத்தில் உள்ள அனைத்து நிறுவனங்களிலும் 10 முதல் 60 சதவீதம் வரை தள்ளுபடி விற்பனை நடைபெற உள்ளதாகவும், குழந்தைகளுக்கான விளையாட்டுகள் மற்றும் பரிசுகள் ஆகியவை இடம்பெற உள்ளதாகவும் மால் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.