"அடேங்கப்பா.. எத்தாதண்டி" - சாலையின் குறுக்கே படுத்திருந்த 12 அடி நீள மலைப்பாம்பு! - today Tirupathur news
Published : Aug 28, 2023, 10:38 AM IST
திருப்பத்தூர்:வாணியம்பாடி அடுத்த கணவாய்புதூர் கிராமத்திற்கு செல்லும் சாலையில் சுமார் 12 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று படுத்திருந்து உள்ளது. குறிப்பாக அப்பகுதியில் தெரு விளக்கு இல்லாத காரணத்தால் மலைப்பாம்பு இருப்பதை யாரும் கவனிக்காமல் அதை கடந்து சென்று வந்துள்ளனர்.
இந்நிலையில் அவ்வழியாக டார்ச் லைட்டுடன் நடந்து சென்ற ஒருவர் அங்கு மலைப்பாம்பு இருப்பதை கண்டு பீதியில் கூச்சலிட்டவாறு ஓட்டம் பிடித்து உள்ளார். அதைத் தொடர்ந்து, அப்பகுதியில் பொது மக்கள் ஒன்று கூடியதை உணர்ந்த அந்த பாம்பு, அங்குள்ள கனகராஜ் என்பவரின் வீட்டுக்குள் நுழைய முயன்று உள்ளது.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த பாம்பு பிடி வீரர் இலியாஸ் என்பவர், நீண்ட நேரம் போராடி அந்த மலைப்பாம்பை லாவகமாக பிடித்து சென்று மலைப் பகுதியில் விட்டார். தற்போது அப்பகுதியில் பாம்புகள் நடமாட்டம் அதிகரித்து வரும் வேளையில், சிறுவர்கள் மற்றும் பொதுமக்கள் அந்த வழியாக சென்று வருவதால் பாதுகாப்பு கருதி தெருவிளக்கு அமைக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.