அரோகரா.. அரோகரா.. ஸ்ரீ காமாட்சி அம்பாள் சமேத ஏகாம்பரநாதர் தேர்த்திருவிழா கோலாகலம் - devotee
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை பூக்கார தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ காமாட்சி அம்பாள் சமேத ஏகாம்பரநாதர் ஈஸ்வரர் திருக்கோயில் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.
இந்த கோயிலில் பங்குனி மாத பிரம்மோற்சவம் மார்ச் மாதம் 26 ஆம் தேதி கொடியேற்றத்துடன் வெகு விமர்சையாக தொடங்கிய நிலையில், தொடர்ந்து 10 நாட்களுக்கு காலை, மாலை என இருவேளையும் விழாவாக மூலவர் காமாட்சி அம்பாள் ஏகாம்பரநாதர் சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
பிறகு சமேதராக உற்சவமூர்த்திகள் பல்வேறு வகையான பூ மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிம்ம வாகனம், ஹம்ச வாகனம், சூரிய பிரபை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு பல்வேறு அவதாரங்களில் அருள்பாலித்து காட்சியளித்தார்.
இதனைத்தொடர்ந்து 7ஆம் நாளான இன்று தேர்த்திருவிழாவில் காமாட்சி அம்பாள் ஏகாம்பரநாதர் சுவாமிகளுக்கு பூ மலர் மாலைகளை கொண்டு அலங்கரிக்கப்பட்டு சிவமேளம், செண்டைமேளம் ,கேரளா மேளம், நாதஸ்வரம் உள்ளிட்ட பலவிதமான மேலதாளங்கள் முழங்க, பட்டாசு வெடித்தும் வான வேடிக்கைகளுடன் முக்கிய வீதிகளின் வழியாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் அரோகரா.. அரோகரா.. அரோகரா.. என பக்தி பரவச கோஷங்களுடன் தேர் ரதத்தை இழுத்துச்சென்றனர்.
இந்த தேர்திருவிழாவில் உள்ளூரிலிருந்து மட்டுமின்றி வெளியூரிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமியை வழிபட்டுச்சென்றனர். இந்த பிரமோற்சவ தேர் திருவிழாவில் தடை ஏற்ப்படாமலிருக்க காவல் துறை அதிகாரிகள் தீயணைப்பு துறை அதிகாரிகள் என அனைவரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:ராவணன் மூக்கு அறுக்கும் விழா - மத்திய பிரதேசத்தில் விநோத பண்டிகை!