Greasy pole: திண்டுக்கல்லில் 80 அடி உயர வழுக்கு மரம் ஏறும் போட்டி.. 3 ஆண்டாக தொடர்ந்து வெற்றி வாகை சூடிய இளைஞர் ரமேஷ்! - 80 feet climb festival
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே ஆவிளிபட்டி செல்வ விநாயகர், முத்தாலம்மன், மாரியம்மன், காளியம்மன், பகவதி அம்மன் கோயில் திருவிழா நடைபெற்றது. இவ்விழா ஜூலை 18-ஆம் தேதி கிராம தெய்வங்களுக்குப் பழம் வைத்து, சாமி சாட்டுதலுடன் தொடங்கியது. தினமும் கோயில்களில் அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம், சிறப்புப் பூஜைகள் நடந்தது. கடந்த ஜூலை 31-ஆம் தேதி மாரியம்மன், காளியம்மன், பகவதி அம்மன் கரகம் பாவித்து அதிகாலை கோவிலுக்கு வந்தடைந்தது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று (ஆகஸ்ட் 02) சுவாமி கண் திறப்பு, வான வேடிக்கை, மாவிளக்கு, அக்கினிச்சட்டி உள்ளிட்ட நேர்த்திக்கடன்களைப் பக்தர்கள் அம்மனுக்குச் செலுத்தினர். அதைத் தொடர்ந்து மாலை 80 அடி உயரமுள்ள வழுக்கு மரத்தை இளைஞர்கள் போட்டிப்போட்டு ஏறினர். இதில் ரமேஷ் என்ற இளைஞர் மர உச்சி தொட்டு வெற்றி பெற்றார்.
இதோடு ரமேஷ் மூன்று ஆண்டுகள் தொடர்ந்து வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த நிகழ்ச்சியைக் காண ஏராளமான பக்தர்கள் அந்த ஊரின் சுற்று வட்டாரங்களிலிருந்து வந்து கலந்து கொண்டு மகிழ்ச்சியடைந்தனர்.