சேலம் அருகே பெருமாள் கோயிலின் 8 ஐம்பொன் சிலைகள் கொள்ளை ... போலீசார் விசாரணை - perumal temple
சேலம்:சேலம் அருகே நூற்றாண்டு பழமை வாய்ந்த பெருமாள் கோயிலில் பூஜிக்கப்பட்டு வந்த 8 ஐம்பொன் சிலைகள் மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொள்ளை போன ஐம்பொன் சிலைகளின் மதிப்பு பல கோடி ரூபாய் என்று கூறப்படுகிறது.
சேலம் மாவட்டம், ஓமலூர் வட்டம் தாரமங்கலத்தில் உள்ளது சாவடி, தெற்கு மாசி வீதி. இங்கு பூவேல்நாடு மகாஜனத்திற்கு பாத்தியப்பட்ட பிரசித்திபெற்ற பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் பல நூற்றாண்டுகளுக்கு பழமை வாய்ந்த கோயிலாகும்.
இங்கு பழங்கால ஐம்பொன் சிலைகளான ஸ்ரீதேவி, பூதேவி,மூலவரான பெருமாள் மற்றும் உற்சவ மூர்த்திகள் உள்ளிட்ட எட்டு சிலைகள் நேற்று இரவு மர்ம நபர்களால் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. இன்று வழக்கம் போல் காலை கோயிலில் பூஜைகள் செய்வதற்காக அர்ச்சகர் கோயிலின் பூட்டைத் திறக்க முயன்ற போது கோயிலின் பூட்டு ஏற்கெனவே உடைக்கப்பட்டு, உள்ளே இருந்த எட்டு ஐம்பொன்னாலான சாமி சிலைகள் காணாமல் போயிருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதனையடுத்து அவர் தாரமங்கலம் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஓமலூர் துணை கண்காணிப்பாளர் சங்கீதா, தாரமங்கலம் காவல் ஆய்வாளர் தொல்காப்பியன் தலைமையில் காவல்துறையினர் இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொதுமக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள தாரமங்கலம் பகுதியில், பழங்கால எட்டு ஐம்பொன் சிலைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சிற்பக் கலைகளுக்கு உதாரணமாகத் திகழும் தாரமங்கலம் அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் அருகே இந்தப் பெருமாள் கோவில் அமைந்துள்ளது.
இங்கு நேற்று இரவு நடைபெற்ற ஐம்பொன் சிலை கொள்ளைச் சம்பவம் பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சர்வதேச சிலைக்கடத்தல் கும்பல்களுக்கு இந்த ஐம்பொன் சிலைத் திருட்டில் தொடர்பு உள்ளதா அல்லது உள்ளூர் கொள்ளையர்களே இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டு உள்ளனரா என்று பல்வேறு கோணங்களில் தாரமங்கலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தீவிரப்படுத்தி உள்ளனர்.
இதையும் படிங்க:Thirukkoil app: பழனி தங்கத் தேரோட்டத்தை இனி மொபைல் ஆப்பில் பார்க்கலாம்!